லஞ்ச வழக்கில் முன்னாள் துப்புரவு ஆய்வாளருக்கு சிறை தண்டனை
தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாப்பேட்டை சாலியதெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிகண்டன் (43). இவர், 2008 ஆம் ஆண்டில் மகர்நோன்புசாவடி பகுதியில் வசித்த தனது தாய் கலைச்செல்வி இறந்தபோது பதிவு செய்யவில்லை. இதனால், இறப்பு பதிவில்லா சான்று கோரி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மணிகண்டன் 2016, மே 19 ஆம் தேதி விண்ணப்பம் செய்தார்.
அப்போது மகர்நோன்புசாவடியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலுள்ள கணினி வரி வசூல் மையத்தில், மாநகராட்சியின் ஏழாவது கோட்ட துப்புரவு ஆய்வாளராகப் பணியாற்றிய ஏ. தாமஸ் பெர்னாட்ஷா (தற்போது 64 வயது) ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதைக் கொடுக்க விரும்பாத மணிகண்டன் தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் ஊழல் காவல் தடுப்பு பிரிவினர் 2016, ஆகஸ்ட் 16 ஆம் தேதி தாமஸ் பெர்னாட்ஷாவை மறைந்திருந்து கண்காணித்தனர்.
அப்போது, மணிகண்டனிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாமஸ் பெர்னாட்ஷாவை ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் கைது செய்தனர். இது தொடர்பாக கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி.சண்முகப்ரியா விசாரித்து தாமஸ் பெர்னாட்ஷாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். ஊழல் தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.வி. நந்தகோபால் மேற்பார்வையில் இந்த வழக்கை திறம்பட நடத்திய அரசு வழக்குரைஞர் எஸ்.முகமது இஸ்மாயில், ஆய்வாளர் எம்.சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோரை உயர் அலுவலர்கள் பாராட்டினர்.