தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த செலவின பார்வையாளர்கள்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி செலவின பார்வையாளராக மதுக்கூர் ஆவேஸ் ஐ.ஆர்.எஸ் , ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளராக சந்தோஷ்சரண் , ஐ.ஆர்.எஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்து, அங்கு பதிவான புகார் விவரங்கள் , அவற்றிற்கான தீர்வுகள் ஆகியவற்றை கேட்டறிந்தனர்.அதன்பின் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் , தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை தேர்தல் செலவின பார்வையாளர்கள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது , தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தல் செலவின பார்வையாளராக காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வந்துள்ளதாகவும் வெளிப்படையான நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்க வருகை புரிந்து தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்கவே தேர்தல் ஆணையம் எளிதான வகையில் சி விஜில் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் புகார் தெரிவிக்கப்படும் அனைத்தும் விதி மீறல்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உரிய முறையில் ஆவணங்கள் கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும், வேட்பாளர் செலவினம் குறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , மக்கள் தொடர்பு அலுவலர் ராமச்சந்திர பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.