ஈரோடு-தன்பாத் வாராந்திர சிறப்பு ரெயில் கோவை வரை நீட்டிப்பு
பைல் படம்
ஈரோடு- தன்பாத் இடையே கோடை கால வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ஏற்கனவே ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு கோவை வரை அந்த ரெயில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவை-தன்பாத் வாராந்திர கோடை கால சிறப்பு ரெயில் (வண்டி எண்-06063) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கலே, விஜயவாடா, ராஜமுந்திரி வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் தன்பாத்-கோவை வாராந்திர கோடை கால சிறப்பு ரெயில் (வண்டி எண்-06064) ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை மாதம் 1-ந் தேதி வரை திங்கள் கிழமைகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் இரவு 11.40 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து நள்ளிரவு 11.42 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.