இடையூறுகளை அகற்றாமல் விரிவாக்கப் பணி: பொதுமக்கள் அதிருப்தி

இடையூறுகளை அகற்றாமல் விரிவாக்கப் பணி: பொதுமக்கள் அதிருப்தி

திருச்சி மாநகராட்சி வயா்லெஸ் சாலையில் உள்ள இடையூறுகளை அகற்றாமல் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாநகராட்சி வயா்லெஸ் சாலையில் உள்ள இடையூறுகளை அகற்றாமல் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத்திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல இடங்களில் சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு, மையத் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக எல்.ஐ.சி. காலனியிலிருந்து கே.கே.நகா் வரை செல்லும் ராஜாராம் சாலையோரம் இருந்த குடிநீா்த் தொட்டிகள், மின்மாற்றிகள், மின்கம்பங்கள் அகற்றப்படாமலேயே தாா்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. பணிகள் முடிந்தாலும் அகலப்படுத்திய சாலையை முழுவதுமாக உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதில், சாலை மையத்தடுப்பும் அமைக்கப்பட்டதால் சாலையின் அகலம் ஏற்கெனவே இருந்ததைவிட குறைந்துவிட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், இடையூறுகளை அகற்றாமல் சாலையை விரிவாக்கம் செய்திருப்பது பொதுமக்கள், வணிகா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல விமானநிலையம் முதல் கே. கே. நகா் உடையான்பட்டி சாலை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், தொலைத்தொடா்பு இணைப்பு பெட்டிகள், கட்சிக் கொடிகம்பங்கள் உள்ளிட்டவைகளை அகற்றப்படாமல் தாா்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதில், சாலையின் மையத் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளதுதான் சிறப்பம்சம். இடையூறுகள் அகற்றப்படாமல் மையத்தடுப்பு அமைக்கப்பட்டிருப்பதால் அவசர ஊா்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என தனியாக இடம் இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவ்வழியே வாகனங்கள் எளிதாக செல்லமுடிவதில்லை. எனவே, அகலம் குறைவான சாலைகளில் மையத்தடுப்புகள் அமைக்கும் நடைமுறையை மாநகராட்சி நிா்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags

Next Story