சட்ட விரோத செயலில் ஈடுபடுவதாக மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு
பைல் படம்
சென்னை ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்(28). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், இவரை, செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், ‘‘நீங்கள் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திலிருந்து புகார் வந்துள்ளது. விரைவில் உன்னை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவித்துள்ளார். அப்போது, நான் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபடவில்லை, என கோகுல் கூறியுள்ளார்.
அதற்கு அந்த நபர், ‘‘எனக்கு தெரிந்த சில அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு ரூ.1 லட்சம் கொடுத்தால், உன்னை கைது செய்வதை தடுக்க முடியும்,’’ என கூறியுள்ளார். இதனால் பதறிப்போன கோகுல், அவர் கூறிய வங்கி கணக்கிற்கு முதற்கட்டமாக ரூ.72 ஆயிரம் அனுப்பினார். இந்நிலையில் அந்த நபர் மீண்டும் கோகுலைத் தொடர் கொண்டு மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கோகுல், அந்த நபரிடம் நீங்கள் யார், எங்கிருந்து பேசுகிறீர்கள், உங்கள் அலுவலகம் எங்கு உள்ளது, நானே நேரில் வருகிறேன், என கூறியுள்ளார்.
உடனே அந்த நபர் இணைப்பை துண்டித்துவிட்டு, செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அப்போதுதான், மர்ம நபர் தன்னை ஏமாற்றியது கோகுலுக்கு தெரியவந்தது. இதுகுறித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் கோகுல் புகார் அளித்தார். அதன்பேரில் ராமாபுரம் போலீசார் வழக்கு பதிந்து நூதன முறையில் பணம் பறித்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்