மாசிநாயக்கன்பட்டியில் ரூ.12 லட்சம் வழிப்பறி: போலீசார் வலைவீச்சு

மாசிநாயக்கன்பட்டியில் ரூ.12 லட்சம் வழிப்பறி: போலீசார் வலைவீச்சு
X

கோப்பு படம் 

மாசிநாயக்கன்பட்டியில் வங்கியில் டெபாசிட் செய்ய எடுத்துச்சென்ற நிதி நிறுவன ஊழியர்களை மிரட்டி ரூ.12 லட்சம் வழிப்பறி செய்த 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

சேலம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் யுவராஜ் (வயது 41). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். ஆத்தூர் நாவகுறிச்சி, கிழக்கு காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் குமார் (27). இவர் அதே நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிதி நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கப்படுகிறது. அதன்படி கடன் வழங்கப்பட்டவர்களிடம் இருந்து ஊழியர்கள் வசூல் செய்த ரூ.12 லட்சத்து 9 ஆயிரத்து 100-ஐ ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு மாசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

யுவராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். குமார் அவரது பின்னால் அமர்ந்து பணப்பையை பிடித்துக்கொண்டு சென்றார். உடையாப்பட்டி கந்தகிரி நூல் மில் எதிரே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கு பின்னால், 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் முகத்தில் மாஸ்க் அணிந்த படி வந்தனர். பின்னர் 6 பேரும், யுவராஜ், குமார் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்களிடம் கத்தியை காண்பித்து மிரட்டி பின்னர் 6 பேரும் சேர்ந்து நிதி நிறுவன ஊழியர்கள் வைத்திருந்த ரூ.12 லட்சத்து 9 ஆயிரத்து 100-ஐ பறித்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் தனது செல்போனை எடுத்து நிதி நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க முயன்றார்.

அப்போது கொள்ளையர்கள் குமாரின் செல்போனை பறித்து சாலையில் போட்டு உடைத்தனர். பின்னர் 6 பேரும், 3 மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் நோக்கி தப்பி சென்று விட்டனர். பின்னர் இது குறித்து அவர்கள் அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன ஊழியர்களிடம் பணத்தை வழிப்பறி செய்த 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story