போலீஸ் எனக்கூறி ரூ.50 லட்சம் பறிப்பு - பாய்ந்தது குண்டர் சட்டம்

போலீஸ் எனக்கூறி ரூ.50 லட்சம் பறிப்பு - பாய்ந்தது குண்டர் சட்டம்

மாநகர காவல் அலுவலகம் 

போலீஸ் என கூறி வியாபாரியிடம் ரூ.50 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். விவசாய விதை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி. இவரிடம் ஒரு கும்பல், தாங்கள் போலீஸ் என்று கூறி, ரூ.50 லட்சத்தை பறித்துக்கொண்டது. பின்னர் இந்த பணத்திற்கான ஆவணங்களை இரும்பாலை போலீசில் ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுச்செல்லவும் என்று கூறி விட்டு தப்பினர். இதையடுத்து வெங்கடேஷ் இரும்பாலை போலீசில் புகார் தெரிவித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் வேலூர் மாவட்டம் இந்திரா நகர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவருடைய மகன் நரேஷ்குமார் (37) என்பவர் ரூ.50 லட்சம் பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். நரேஷ்குமார் கொள்ளை கும்பல் தலைவன் என கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் என கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட நரேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள நரேஷ்குமாரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

Tags

Next Story