பேராவூரணியில் கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆர்.என்.டி திருமண மண்டபத்தில், கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ஏ.எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நடராஜன் வரவேற்றார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்து, கண் பரிசோதனை செய்து கொண்டார்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பாத்திமா சாகிதா, தமிழ்ச்செல்வி, யோக ரூபினி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், கண் நோயாளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். முகாமில், 275 பேர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 86 பேருக்கு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், லயன்ஸ் மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பாண்டியராஜன், இளங்கோ, நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளாளர் சிவானந்தம் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை லயன்ஸ் நிர்வாக அலுவலர் குமரன், அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.