தமிழ் சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம்

திருப்பனந்தாளில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் பழைய அரசு மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோணுளாம்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தமிழ் சேவா சங்கம் சார்பில் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை தமிழ் சேவா சங்கம் தலைவர் சரவணபெருமாள் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அபினேஷ் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

கண்புரை நோய்க்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச லேசர் போக்கோ லென்ஸ் சிகிச்சை, தனியார் மருத்துவமனையில் கண்புரை சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு 50 சதவீத சலுகை கட்டணத்தில் லென்ஸ் சிகிச்சை, கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடி வழங்குதல், கண் நோய்க்கு இலவச மருத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இலவச ரத்த அழுத்த மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் மருத்துவர்கள், தமிழ் சேவா சங்கம் நிர்வாகிகள், செவிலியர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story