குமரியில் கோஷ்டி மோதல்: 4 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 48), கட்டிட தொழிலாளி. சம்பத்தன்று வீட்டின் அருகாமையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த வினோலின் (36), அனல் ஜெகலின் றோஸ் (37) ஆகியோர் கிண்டல் செய்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அவரது தாயார் கனகம்மாள் (70), தடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அவரையும் கம்பியால் தாக்கியதால் அவரும் படுகாயம் அடைந்துள்ளார்.
இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல மறுதரப்பில் கொடுத்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த பிறிகேஸ் வினோலின் (26), அவ்வழியே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது சாந்தப்பன் (46), ஜான்சன் (55) ஆகியோர் தடுத்து நிறுத்தி இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக இருதரப்பினையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.