தோல்விதான் வெற்றிக்கான முதல்படி: மாவட்ட கல்வி அலுவலர்
மாணவர்களுக்கான பயிற்சி
தோல்வி தான் வெற்றிக்கான முதல் படி என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான பயிற்சி, கருத்தரங்கம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கு.திராவிடச் செல்வம் தலைமையில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் அ.அங்கையற்கன்னி, கா.கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் பேசியதாவது, "ஆசிரியர் சொல்லை எவர் கேட்கிறார்களோ, அவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர், வெற்றி பெறுவார்கள்... அரசு பள்ளியில் படித்தவர்கள் தான், அரசின் மிகப்பெரிய தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இன்றைக்கு தொலைக்காட்சி, திரைப்படங்களில் மாணவர்கள் தங்கள் கவனத்தை செலுத்தக் கூடாது. அது உங்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும். தொலைக்காட்சியில் அறிவு சார்ந்த விஷயங்களை தருகிறார்கள். அதனை கவனிக்கலாம். மாணவர்கள் செய்தித்தாள்களை படிக்க வேண்டும். அதன் மூலம் பொது அறிவினை பெறலாம். நூலகம் செல்ல வேண்டும். அது உங்களை போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும். மாணவர்கள் தொடர் முயற்சிகளை செய்ய வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாது. தோல்விதான் வெற்றிக்கான முதல் படி என்பதை உணர வேண்டும்" இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கை. செல்வம், வட்டார ஒருங்கிணைப்பாளர் த.முருகையன் மற்றும் பேராவூரணி ஒன்றியத்தைச் சேர்ந்த 11 அரசு நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வை எதிர் கொள்ள உள்ள 90 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பட்டதாரி ஆசிரியர் ஜீவிதா நன்றி கூறினார்.
Tags
Next Story