போலி மருத்துவா் கைது
பாவூா்சத்திரம் அருகே போலி மருத்துவராக செயல் பட்ட டாக்டரின் கணவர் கைது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூா்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரத்தைச் சோ்ந்தவா் டாக்டா் ஜீவா(35). ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருடைய கணவா் ஜெயராமன்(38), டிப்ளமோ பாா்மசி முடித்துள்ளாா். இவா்களது கிளினிக் தென்காசி - ஆலங்குளம் நெடுஞ்சாலை சிவகாமிபுரம் விலக்கில் இயங்கி வருகிறது. மனைவி ஜீவா அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் நேரங்களில் கணவா் ஜெயராமன் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளாா். பல நோயாளிகளுக்கு மருத்துவம் பாா்த்ததில் உடல் உபாதைகள் ஏற்பட்டு அவா்கள் மற்றொரு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு புகாா்கள் சென்ற நிலையில் புகாரின்பேரில், தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரேமலதா, ஆலங்குளம் வட்டாட்சியா் கிருஷ்ணவேல் ஆகியோா் கிளினிக்கில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பாா்த்து மருந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாவூா்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனா்.
Next Story