பேரணாம்பட்டு அருகே போலி டாக்டர் கைது
கைது செய்யப்பட்ட போலி டாக்டர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கீழ்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (51). இவர் டாக்டருக்கு படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வருவதாக தமிழக முதல்-அமைச்சரின் தனிபிரிவுக்கு பொது மக்கள் சார்பில் புகார் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பேரில் வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பாலசந்தர் நடவடிக்கை எடுக்கும்மாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் மாறன் பாபு தலைமையில் மருந்தாளுனர் லலித் குமார், மேல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் ஆகியோர் ஏழுமலையின் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். மேலும் ஏழுமலையிடம் நடத்திய விசாரணையில் அவர் செவிலியர் உதவியாளருக்கு படித்து விட்டு தனது வீட்டில் கடந்த 2 வருடங்களாக கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு ஊசி போட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவரது கிளினிக்கில் இருந்த ஊசிகள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும்,மேல்பட்டி காவல் நிலையத்தில் மருத்துவ அதிகாரி டாக்டர் மாறன் பாபு கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் குப்பன் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ஏழுமலையை கைது செய்தார்.