உப்பிலியபுரத்தில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டவர் கைது.
உப்பிலியபுரத்தில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து அதிர்ச்சியளிக்கிறது. மேலும் பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராயம் குறித்து சோதனைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெட்டவேலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராயம் ஊரல் போடுவதாக மாவட்ட காவல் உதவி எண் 9487464651 மூலம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதனடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது நெட்டவேலம்பட்டி நடுத்தெருவில் வசித்து வரும் பொதியன் மகன் முத்துசாமி (வயது 50) என்பவரது தோட்டத்தில் முசிறி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் நேற்று ஜூன் 19ம் தேதி சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக இருந்த 250 லிட்டர் சாராயம் ஊரல் மற்றும் 6 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் Cr.No.394/24, u/s 4 (1)(aaa) 4(1)(g) r/w 4(1)(A)TNP Act- வழக்கு பதிந்து முத்துசாமி என்பவரை கைது செய்து துறையூர் குற்றவியல் நடுவரிடம் ஆஜர்படுத்தி, வரும் ஜூலை 3ம் தேதி வரை காவல் அடைப்பு பெறப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளார். மேலும் மேற்படி இரகசிய தகவலினை கொடுத்த நபரின் ரகசியம் காக்கப்பட்டு, அவருக்கும் மற்றும் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது. இதுபோன்ற, குற்ற நிகழ்வுகள் பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் 9487464651ல் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.