கஞ்சா குறித்து பொய் செய்திகள்: எஸ்.பி எச்சரிக்கை
மாவட்ட எஸ்பி
கஞ்சா குறித்து பொய் செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி எஸ்.பி., எச்சரித்துள்ளார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு:உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் கடந்த 29ம் தேதி கஞ்சா வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான இருவரும் பள்ளியில் படிப்பவர்கள் அல்ல. ஆனால், கஞ்சா பொட்டலங்களுடன் கைதான இருவரும் பள்ளி மாணவர்கள் எனவும், கஞ்சாவை இனிப்புடன் கலந்து மற்ற மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரவி வருகிறது. பொதுமக்கள் இந்த செய்தியை நம்பி அச்சப்பட வேண்டாம்.
இதுபோன்று பொய் செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.