போலி ரசீது; நகை அடகு கடையில் லட்சக்கணக்கில் பண மோசடி
திருப்பூரில் அடகு கடையில் போலி ரசீது தயாரித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி3 பேர் கைது. திருப்பூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில் நகை அடகு கடைகள் செயல்பட்டு வருகின்றன. நகைகளை அடகு வைப்பதற்கு அரசு மற்றும் தனியார் வங்கிகள் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதால் மக்கள் அடகு கடைகளில் நகைகளை அடகு வைக்கின்றனர். அடகு கடைகளில் பொதுமக்கள் வழங்கும் நகைகளுக்கு உடனுக்குடன் பணம் கடன் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில் சுரேஷ் பாண்டி (32) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரிடம் 8 வருடங்களாக சிவகங்கையை சேர்ந்த அருண் (25) என்பவர் வேலை பார்த்து வருகிறார். நகை அடகு கடையில் அடகு வைப்பதற்காக வரும் பொது மக்களிடம் நகைகளை அடமானமாக பெற்று அதற்கு பணம் வழங்கி அத்துடன் ரசீதும் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில் அடகு வைப்பதற்கு நகைகளை கடையில் வாங்காமலேயே போலியாக நகைகள் அடகு பெற்றதாக ரசீது வழங்கி லட்சக்கணக்கில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு உறுதுணையாக அவரது நண்பர்கள் சக்திவேல் (26), பிரதீப் (27) ஆகியோர் உடன் இருந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அடகு கடையில் அதன் உரிமையாளர் சுரேஷ் பாண்டி திடீர் ஆடிட்டிங் செய்த போது நகைகள் கடையில் இல்லாமல் ரசீது மட்டும் இருந்துள்ளது. இதை அடுத்து சந்தேகம் அடைந்த சுரேஷ் பாண்டி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 3 பேரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் போலியாக ரசீது போட்டு பணத்தை மட்டும் எடுத்து வந்துள்ளனர். அதுவும் மாதம் ஒருமுறை உரிமையாளர் சுரேஷ் பாண்டி கடையில் ஆடிட்டிங் செய்ய வரும் போது காங்கேயம் சாலையில் உள்ள மற்றொரு கிளையில் இருந்து போலி ரசீதுக்கு தகுந்த வாரு நகைகளை எடை கணக்கில் எடுத்து வந்து கணக்கு காட்டி வந்துள்ளனர். தொடர்ந்து சுரேஷ் பாண்டி காங்கேயம் சாலை கடைக்கு செல்லும் போது இவர் செல்வதற்க்கு முன் எடுத்து வந்த நகைகளை மீண்டும் இங்கு கொண்டு வந்து இந்த கடைக்கு கணக்கு காட்டி உள்ளனர். இதை தொடர்ந்து கணக்கு சரியாக உள்ளது என உரிமையாளர் சுரேஷ் பாண்டி சென்றுள்ளார். இந்த நிலையில் சுரேஷ் பாண்டி தாராபுரம் சாலை கரட்டாங்காடு கடையில் திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கணக்கு காட்டுவதற்கு வழி இன்றி இவர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த நிலையில் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நகை அடகு கடையில் 8 வருடங்களாக பணியாற்றிய அருண், பிரதீப் அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் 40 பவுன் வரை நகை மற்றும் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து அருண்,பிரதீப், சக்திவேல் ஆகிய 3 பேரையும் திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளது.