புதினா விலை வீழ்ச்சி
உப்பில்லா பண்டம் குப்பைக்கு சமம் எனும் பழமொழிக்கேற்ப அத்தியாவசிய உணவு பட்டியலில் மிக முக்கிய பங்காற்றுவது புதினா இலை ஆகும் . தக்காளி உணவு முதல் பிரியாணி,கறிக்குழப்பு, வரை புதினா இலையின் அத்தியாவசியம் தவிர்க்க முடியாததாகும். மேலும் உணவகங்களில் புதினா சட்டினி, புதினா சோறு என புதினா இலையின் தேவை ஒவ்வொரு உணவிலும் முக்கிய தேவையாக உள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக புதினா இலை விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து குமாரபாளையம் திருச்செங்கோடு சாலையில் புதினா பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறும் பொழுது பொதுவாகவே தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிக அளவு புதினா உற்பத்தி செய்யப்படும் இடமாக உள்ளது. தோராயமாக அங்குள்ள விவசாயிகள் 2000 ஏக்கருக்கும் மேலாக புதினா சாகுபடி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் புதினா இலை தேவையை பூர்த்தி செய்வதில் கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னணியில் உள்ளது .
அதனை ஒட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதினா இலை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தாலும் நாமக்கல் மாவட்டத்திலும் கணிசமான அளவில் விவசாயிகள் புதினா இலை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகளவு கோடை வெப்பத்தின் காரணமாக புதினா இலை விளைச்சல் குறைந்து விலை அதிகரித்து காணப்பட்டது . மேலும் வெயில் தாக்கத்தின் காரணமாக புதினா இலைகள் வாடிப் போகும் நிலையும் ஏற்பட்டது . இதன் காரணமாக சந்தையில் புதினா இலைக்கு டிமாண்ட் ஏற்பட்டு ஒரு கட்டு புதினா பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. மேலும் தற்போது வைகாசி மாதம் திருமண விசேஷ நிகழ்வுகளால் அத்தியாவசிய காய்கறிகள் விலை கணிசமாக உயரும். அதனை ஒட்டிப் புதினா இலையும் விலை உயர்வு ஏற்படும் நிலையில் புதினா இலை விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மே மாத துவக்கத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக கன மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழையின் காரணமாக மாவட்ட முழுவதும் புதினா இலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எங்களிடமிருந்து புதினா ஒரு கட்டு ஐந்து முதல் ஏழு ரூபாய் வரை வியாபாரிகள் வாங்கி அதை பொதுமக்களுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்து வருகின்றனர். விளைச்சல் அதிகரிப்பால் புதினா இலை குறைந்துள்ளது என்னை போன்ற விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவித்தார்...