ரேஷன் அரிசி விற்றால் குடும்ப அட்டை முடக்கம் - ஆட்சியர் எச்சரிக்கை

ரேஷன் அரிசி விற்றால் குடும்ப அட்டை முடக்கம் - ஆட்சியர் எச்சரிக்கை

மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 

ரேஷன் அரிசியை விற்கும் பொதுமக்களின் குடும்ப அட்டைகள் முடக்கப்படும் என்றும், அரிசியை வாங்கி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1011 நியாய விலைக்கடைகள் மூலமாக 6 இலட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி வழங்கப்பட்டு வருகின்றது. அரசால் வழங்கப்படும் அரிசியினை சிலர் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, லாப நோக்கத்தோடு பதுக்கி வைத்து, அரிசி ஆலைகளில் பட்டை தீட்டி கள்ளச்சந்தையிலும், வெளிமாநிலங்களிலும் அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டி வருவதாக தெரிய வருகின்றது.

இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இனி வருங்காலங்களில் இது போன்று பொது விநியோகத்திட்ட பொருட்களை முறைகேடாக பெற்று, கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் நபர்கள் மீது தமிழ்நாடு கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பண்டங்கள் பராமரிப்புச் சட்டம் 1980 ன் கீழ் தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்களுள் சிலரும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் ரேசன் அரிசியினை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தாமல் லாப நோக்கத்தோடு, இது போன்ற நபர்களுக்கு விற்பனை செய்வதாக தெரியவருகின்றது. இத்தகைய செயலில் ஈடுபடும் பொதுமக்கள் கண்டறியப்பட்டால், இனி வருங்காலங்களில் அவர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955 ன் படி அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்ப அட்டைகள் முடக்கம் செய்யப்படும் என என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story