கிராம விவசாயிகளுக்கு பண்ணைக் கழிவுகள் மேலாண்மை பயிற்சி

கிராம விவசாயிகளுக்கு பண்ணைக் கழிவுகள் மேலாண்மை பயிற்சி
அட்மா பயிற்சி
நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் கிராம விவசாயிகளுக்கு பண்ணைக் கழிவுகள் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல், வகுரம்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் “பண்ணைக் கழிவுகள் மேலாண்மை” குறித்து பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் வகுரம்பட்டியை சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா பண்ணைக் கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை மக்கவைத்து இயற்கை உரமாக்கும் முறை பற்றியும், அக்கழிவுகளை மறு சுழற்சி செய்து நிலத்தில் இடும்போது மண்ணில் கார்பன், நைட்ரஜன் சத்து அதிக அளவில் கிடைக்கும் என்பது குறித்தும் விளக்கமளித்து பயிற்சியளித்தார்.

இந்த பயிற்சியில் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மண்ணியல் துறையின் பேராசிரியர் முனைவர்.அப்பாவு சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு “பண்ணைக் கழிவுகளான வைக்கோல், நிலக்கடலை ஓடு, கரும்பு சோகை, மக்காசோள கழிவுகள், ஆமணக்கு தோல்கள், மரவள்ளி கழிவுகள், கால்நடைகள் தீவன கழிவுகள், போன்ற பண்ணைக்கழிவுகள் மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு தேவையான உள்ளீட்டு பொருளாக மாற்றும் முறைகள் பற்றியும், வேளாண் கழிவுகள் மூலம் உருவாக்கப்படும் மண்புழு உரத்தின் பயன்கள் பற்றியும் மண்வளம் மேம்பட மண்மாதிரி, நீர்மாதிரி எடுத்து ஆய்வு செய்வதன் பயன்கள் குறித்தும் விரிவாக விளக்கமளித்து பயிற்சியளித்தார்.

பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ் கழிவு சிதைப்பானில் உள்ள மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்கள், பயிர்களுக்கு வழங்கும் மாட்டுச்சாணம், ஆட்டு எரு மற்றும் இயற்கை உரங்கள், இடுபொருட்களை மிக விரைவாக மக்க வைத்து, சத்துமிக்க உரமாக மாற்றுகின்றன என்றும் 'வேஸ்ட் டீகம்போசர்' கழிவு சிதைப்பான் செயல்விளக்கம் செய்து காண்பித்து விளக்கமளித்தார். பயிற்சியில் அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து விளக்கமளித்து நன்றி கூறி. பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story