விவசாயி மர்ம மரணம் - போலீசார் விசாரணை

விவசாயி மர்ம மரணம் - போலீசார் விசாரணை

பைல் படம் 

தட்டார்மடம் அருகே விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே செட்டியார் பண்ணை கிராமத்தில் சாலையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடபப்பதாக இன்று வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா, உதவி ஆய்வாளர் குரூஸ் மைக்கேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் பிணமாக கிடந்தவர் நெல்லை மாவட்டம் உவரி அருகேயுள்ள வெம்மனக்குடியை சேர்ந்த கந்தன் மகன் முருகன் (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாயியான முருகன், நண்பர்களுடன் தட்டார்மடம் பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்துவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு அதிசயபுரத்தை சேர்ந்த ஒருவரது பைக்கில் இடைச்சிவிளை பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு வந்துள்ளார். மது அருந்திய பின்னர் சுமை ஆட்டோ வண்டியில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் செட்டியார் பண்ணை கிராமத்தில் தலையில் காயத்துடன் அவரது சடலத்தை போலீசார் மீட்டு உள்ளனர். அவர் அந்த வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இருந்தாரா? அல்லது வேறு வாகனம் மோதி இறந்தாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உதவி ஆய்வாளர் குருசு மைக்கேல் வழக்கு பதிவு செய்தார். ஆய்வாளர் அனிதா விசாரணை நடத்தி, அந்த வாகனம் குறித்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் ஆய்வு செய்து வருகிறார். இறந்த முருகனுக்கு மனைவி கலைச்செல்வி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்

Tags

Next Story