தோப்பிற்குள் வரும் காட்டு யானையால் விவசாயிகள் அச்சம்

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தோப்பிற்குள் வரும் காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மலைப்பகுதியில் யானை, புலி காட்டெருமை, காட்டுப்பன்றி , மிலா,மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக இருக்கிறது.ஒவ்வொரு மா சீசன் நேரத்தில் உணவு தேடி தோப்பிற்குள் புகுந்து மா, தென்னை உள்ளிட்ட மரங்களை யானைகள் சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான அத்திகோயில் பகுதி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை விளைநிலங்களுக்குள் அவ்வப்போது நுழைந்து மாமரங்களை சேதப்படுத்துவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலைப்பகுதியில் இருந்து பண்டாரம்பாறை அருகே உள்ள மாந்தோப்பிற்குள் புகுந்த ஒற்றைக்காட்டு யானை அப்பகுதியில் உள்ள மாமர கிளைகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது. மேலும் மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்தை நோக்கி இறங்கும் காட்டு யானை மாந்தோப்பிற்குள் புகுந்து மாங்காய்களை சாப்பிட்டு விட்டு மா மரங்களை வேரோடு பிடுங்கியும், மர கிளைகளை ஒடித்தும் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெறும் நஷ்டத்திற்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

வனவிலங்குகளை பாதுகாக்கும் வனத்துறையினர், விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் யானைகள் தோப்பிற்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் , தோப்பை சுற்றி மின்வேலிகள் அமைக்க அரசு மானியம் வழங்கவும்,வனப்பகுதியில் இருந்து விலங்குகள் உங்களுக்கு சுற்றி தெரியும் ஒற்றை காட்டுயானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story