காஞ்சியில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் புலம்பல் !

காஞ்சியில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் புலம்பல் !

காட்டுப்பன்றி

காஞ்சியில் காட்டுப்பன்றி நடமாட்டம் பெருகி உள்ளதால், விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து வருகின்றனர்.பல பகுதிகளில் பயிர் செய்யவே விவசாயிகள் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் பெருகி உள்ளதால், விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து வருகின்றனர். நெல், சிறுதானியங்கள், வேர்க்கடலை, கரும்பு, வாழை, கத்தரி உள்ளிட்ட சாகுபடி நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து விவசாயத்தை சீரழித்து வருகின்றன. காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முள்வேலி, மின்சாரவேலி, வண்ணத்துணிகள் ஆகியவற்றை வயலை சுற்றி கட்டுதல் மற்றும் பல்வேறு ரசாயன மருந்துகள் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொண்டு விவசாயிகள் தோல்வி அடைந்து வருகின்றனர். சமீபத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின்கீழ், வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் இயங்கி வரும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் சார்பில், ஆராய்ச்சிகள் மேற்கொண்டு காட்டுப்பன்றியை உயிரியல் முறையில் விரட்டிட மருந்து தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், அந்த வகையான மருந்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இல்லை. இதனால், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளவே ஆர்வம் இல்லாத நிலை உள்ளதாக, விவசாயிகள் பலரும் புலம்புகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவரும், சாத்தணஞ்சேரி பகுதி விவசாயியுமான தனபால் கூறியதாவது: காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து காடுகளில் சுற்றித் திரிவது போல தற்போது விவசாய நிலங்களில் கூட்டம், கூட்டமாக வலம் வருகின்றன். வயல்கள் மட்டுமின்றி நீர் பாய்ச்சலுக்கான வரப்புகளையும் புரட்டிப் போடுகின்றன. காட்டுப்பன்றி தொந்தரவு காரணமாக பல பகுதிகளில் பயிர் செய்யவே விவசாயிகள் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story