பட்டா வழங்காததை கண்டித்து விவசாயிகள் தேர்தலை புறக்கணிப்பு!
இரும்பாலைக்கு நிலம் கொடுத்த பட்டா வழங்காததை கண்டித்து விவசாயிகள் வாக்களிக்க வராமல் 300-க்கும் மேற்பட்டோர் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணித்தனர்.
சேலம் இரும்பாலைக்கு கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடமாக வட்டமுத்தாம்பட்டி காமராஜ் நகரில் நிலம் கொடுத்துள்ளனர். இங்கு தற்போது 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மாற்று இடம் வழங்கப்பட்ட அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் காமராஜ் நகர் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்தனர். வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலில் ஓட்டு போடுமாறு கூறினர். ஆனால் பட்டா கிடைக்காமல் ஓட்டு போட மாட்டோம் என உறுதியாக தெரிவித்திருந்தனர். தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் இதனிடையே நேற்று காமராஜ் நகரை சேர்ந்த விவசாயிகள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். 300-க்கும் மேற்பட்டோர் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் வட்டமுத்தாம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.