பயிர்களை நாசப்படுத்திய பன்றிகள் - வலைவைத்து பிடித்த விவசாயிகள்
பயிர்களை நாசப்படுத்திய பன்றிகளை வலை வைத்து பிடித்த விவசாயிகள்
நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவிரி நீர் தட்டுப்பாடு அதீத பருவமழை மற்றும் கூடுதல் பனி பொழி உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் இருந்து தப்பித்து, அதிக பொருட் செலவிற்கு மத்தியில் நெற்பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.இருப்பினும் பன்றிகளின் தொல்லையால் பெருமளவில் பயிர்கள் நாசமாகி பதிக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
நாகப்பட்டினம் அடுத்துள்ள சங்கமங்கலம், அழிஞ்சமங்கலம், செல்லூர், பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள பயிர்களை பன்றி கூட்டங்கள் புகுந்து நாசமாக்கி விடுகிறது. விவசாயிகள் பன்றிகளை விரட்ட முயற்சி செய்தால் கடித்து விடுமோ என்ற அச்சத்தில்,நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெற்பயிர்களை நாசமாக்கும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரையில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் பன்றிகளை பிடிக்க இங்கு நாகை வந்து முகாமிட்டுள்ளனர். பன்றிகள் இருக்கும் இடத்திற்கு முன்பு வலைகளை விரித்து பன்றிகளை விவசாயிகள் ஒத்துழைப்புடன் விரட்ட தொடங்கினர். பன்றிகள் சப்தம் கேட்டு ஓடி வந்து விரிக்கப்பட்டுள்ள வலைகளில் சிக்கியது. முதற்கட்டமாக இன்று சிவ சக்தி நகர் ஐயவநல்லூர், சங்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காலை முதல் மாலை வரை 60க்கும் அதிகமான பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் பன்றிகளை விரட்டி பிடிக்க முயன்ற போது பன்றி வளர்ப்போருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் படுத்தி, பன்றி வளர்ப்போரை எச்சரித்து அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினார்.நாகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று போலீசார் பாதுகாப்புடன் பன்றிகள் பிடிக்கப்பட்டு வரும் செயல் விவசாயிகளிடையே மகிழ்ச்சியையும் சற்று நிம்மதியையும் ஏற்படுத்தி உள்ளது.