கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகவும் விவசாயிகள் புகார்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி அருகே குரண்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவே புதிதாக தனியார் கல்குவாரி ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த தனியார் கல்குவாரிக்கு கனரக வாகனங்கள் செல்வதற்காக தனியாக பாதை இல்லை என கூறப்படுகிறது. இதனால் கல்குவாரியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் கல்குவாரி கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் அப்பகுதியில் உழுது வைக்கப்பட்ட நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், குரண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரிக்கு வாகனங்கள் செல்ல பாதை இல்லை எனவும், இதனால் விவசாய விளைநிலங்களில் கனரக வாகனங்கள் செல்வதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், மேலும் கல்குவாரிக்கு பாதை அமைப்பதற்காக அங்குள்ள ஊரணியை கல்குவாரியில் தோண்டப்பட்ட மண் கொண்டு மூடி பாதை அமைக்கும் முயற்சி நடைபெறுவதாகவும், இதனால் பாதி அளவு ஊரணி மூடப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கல்குவாரியை சுற்றி விவசாய நிலங்கள் உள்ளதால் திடீரென வெடி வெடிப்பதாகவும், இதனால் குவாரி பணியாளர்கள் விளைநிலங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் தங்களை விரட்டுவதாகவும், மேலும் விளைநிலங்களை கல்குவாரி தூசிகள் மூடி அழிப்பதாகவும் இதனால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் விளைநிலங்களுக்கு நடுவே இது போன்று விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கல்குவாரி மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story