வாய்க்கால் மதகுகள் திறக்க விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் கிளை வாய்க்கால் மதகு திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமக்கு மாவட்டம் குமாரபாளையம் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் கிளை வாய்க்கால் மதகு திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலரும், விவசாயியுமான மாதேஸ்வரன் கூறியதாவது: மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் ஆண்டுதோறும் விவசாயத்திற்காக ஜூலை மாத இறுதியில் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருப்பதால், வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் சாகுபடி உள்ளிட்ட பல பயிர்களை பயிரிட முடியாமல் விவாசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது கடும் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், கால்நடைகளுக்கு கூட போதிய தண்ணீர் கொடுக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. வறட்சி நிலை நீடித்து, நிலத்தடி நீர் மட்டமும் மிகவும் குறைந்து, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதனை தடுக்க, வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
தேர்தல் சமயத்தில் இதனால் போராட்டம் போன்ற நடவடிக்கையில் பொதுமக்கள், விவசாயிகள் ஈடுபட்டால் என்ன ஆவது? என எண்ணி, தற்போது வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது எனவும், இந்த தண்ணீர் ஏப். 10 வரை வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த குறுகிய நாட்களாவது தண்ணீர் வந்தால் தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பாக உள்ளது. மேலும் கிளை வாய்க்கால் மதகுகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறந்து விட்டால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும். கிளை வாய்க்கால் பகுதிகளில் கூட ஆயிரக்கணக்கான கால்நடைகள் உள்ளன. அவற்றிற்கும் குடிநீர் கிடைக்கும். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, குறைந்த அளவிலான தண்ணீர் தான் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கிளை வாய்க்கால் மதகுகள் திறக்க வாய்ப்பு குறைவு. இருப்பினும் மேலதிகாரிகள் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்கள். விரைவில் மதகுகள் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மூன்றாவது வார்டு கவுன்சிலர் தனசேகரன் கூறும் பொழுது தற்பொழுது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி உள்ளது இதனால் கால்நடைகளும் தண்ணீர் இன்றி காணப்படுவதால் கிளை கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்