நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, விவசாயிகள் கோரிக்கை

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, விவசாயிகள் கோரிக்கை

செய்யாறு

ஏரியை துார்வாரி சீரமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்யூர் அருகே அரியனுார் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஏரியின் வாயிலாக, 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் நெல், மணிலா, உளுந்து போன்றவை பயிரிடப்படுகின்றன.

அதிகபடியாக சம்பா பருவத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. பின்னகண்டை ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக அரியனுார் ஏரிக்கு வந்தடைகிறது. அரியனுார் ஏரியில் இருந்து இரண்டு கலங்கல்கள் மற்றும் ஒரு மதகு வாயிலாக உபரிநீர் வெளியேறி கால்வாய் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்கிறது. இந்த ஏரி பல ஆண்டுகளாக துார்வாரி சீரமைக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலத்தில் ஏரியில் போதுமான அளவு நீரை தேக்கி வைக்க முடியாமல் தண்ணீர் வீணாகி வருகிறது.

இதனால், கோடைக்காலத்தில் ஏரி வறண்டு விடுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஏரியில் தண்ணீர் இல்லாமல் குடிநீருக்காக கால்நடைகள் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அரியனுார் ஏரியை துார்வாரி சீரமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story