சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டம்
விவசாயிகள் தர்ணா போராட்டம்
நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சி.பி.சி.எல் ஆலை உள்ளது.இந்த ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம்,முட்டம்,நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்திய நிலத்திற்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள்,விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் சேர்ந்த விவசாயிகள் சி.பி.சி.எல் நிறுவனம் உடனடியாக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களை அளவீடு செய்து ஆலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நிலை எடுப்பில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும்,நில எடுப்பில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்,கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் இரண்டு ஆண்டுகளாக அளவீடு செய்யாமல் இருப்பதால் உடனடியாக அளவீடு செய்யும் பணிகளை முடிக்க வேண்டும் அல்லது விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு விளை நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன்,தாசில்தார் ராஜா,துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன்,நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.