கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமையில் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன், தாசில்தார் சரளா,சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் சுகுணா, தோட்டக்கலை உதவி இயக்குனர் அமுல்சேவியர் பிரகாஷ்,ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் ஜான்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வேளாண் அலுவலர் பிரியங்கா அனைவரையும் வரவேற்றார். விவசாய சங்க பிரதிநிதிகள் முத்தகரம்பழனிசாமி, வயலூர் சதாசிவம்,வேட்டவலம் மணிகண்டன், அட்மா ஆலோசனை குழு தலைவர் சிவக்குமார் சோமாசிபாடி கேசவன் இயற்கை விவசாயி கிருஷ்ணன், நீலந்தாங்கல் பாரதியார், விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஏழுமலை, கோதண்டராமன், குணசேகரன் உட்பட பலரும் பேசினர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: தொடக்க வேளாண்கூட்டுறவு சங்கங்களில் உரம்,யூரியா இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்பு அறுவடைக்கு வெட்டு கூலி குறைக்கவும்,விவசாயிகளுக்கு விதை மணிலா கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி,பண்டிதர் ஆகியோருக்கு இலவச வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோமாசிபாடி- சித்தேரியிலிருந்து ஆராஞ்சி ஏரிக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக சிமெண்ட் கால்வாய் அமைக்க நடவடிக்கைஎடுக்க முடியுமா? சோமாசிபாடியில் உள்ள பொதுப் பணித்துறை ஏரி மதகை உயர்த்த நடவடிக்கை எடுக்கவும், ஏரி கால்வாய்களை சீரமைக்க வேண்டும். தரைமட்ட கிணறுகளுக்கு இரும்பு வலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாங்குளம் பகுதியிலிருந்து அகரம் செல்லும் பாதையில் நீர் பிடிப்பு பகுதி மற்றும் நீர் செல்லும் கால்வாய் ஒட்டியவாறு உலர்க்களம் அமைத்து உள்ளனர். இதற்கு நீர் செல்ல ஏதுவாக கல்வெட்டு அமைக்க வேண்டும்.

நீர்வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம சாலைகளில் முட்செடிகளை அகற்றவும். குண்டும் குழியுமாக உள்ளதையும் சரி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் சுகாதார நடவடிக்கை எடுக்கவேண்டும். கடைகளில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும், மேலும் கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா,டிஏபி உரம், இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை குண்டர் சட்டத்தில் வேண்டும், தளவாகுளம் வாரச் சந்தையில் அறிவிக்கப்படாத சில வாகனங்களுக்கு கட்டாய வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். உரம் யூரியாவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதையும். இணை பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

வெண்ணியந்தலில் 100 நாட்கள் வேலைசெய்வதை சின்ன ஓலைப்பாடிக்கு மாற்றி வேலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரமான விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் இடுபொருட்களுக்கான பட்டியல் வழங்க வேண்டும். கரிப்பூர்-பன்னியூர் சாலை குண்டும்,குழியுமாக உள்ளதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்டவலம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்குள்ள பெரிய ஏரியில் குப்பை கொட்டுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல இடங்களில் மின்சார ஒயர்கள் தாழ்வான நிலையில் உள்ளதை உயர்த்தி சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்துக்களில் நீர்வரத்து கால் வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன ஓலைப்பாடியில் வயல் வழியாக செல்லும் பாதையை தார் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர். முடிவில் வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணி நன்றி கூறினார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென கட்சி சார்பற்ற விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் மாதந்தோறும் நடக்கும் ஒவ்வொரு விவசாய குறை தீர்வு கூட்டத்திலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் கூறிக்கொண்டு கூட்ட அரங்கிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.

Tags

Next Story