விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி தலைமையில் நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் வேளாண்மைத்துறை சார்பில் நல்ல தரமான விதைகள், மருந்துகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கிசான் நிதி திட்டத்தில் தொடர்ந்து கவுரவ நிதி கிடைக்காதவர்களின் தற்போதைய நிலை இணைய தளத்தில் பார்க்கப்பட்டு, உடனடியாக தீர்வு செய்யப்பட்டது. விவசாய நிலங்கள் வணிக ரீதியான நிலங்களாக பதிவுத்துறை ஆவணத்தில் உள்ளதால், அதனை விவசாய நிலமாக பதிவு மாற்றம் செய்து தர வேண்டி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். இதில் பரமத்தி, எலச்சிபாளையம், திருச்செங்கோடு, கபிலர்மலை, மல்லசமுத்திரம், பள்ளிபாளையம் ஆகிய ஆறு வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். கடந்த ஆண்டுகளில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் மகசூல் இழப்பீடு தொகையானது அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது என, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் பயிர் காப்பீட்டு உதவி இயக்குனர் ராமச்சந்திரன் கூறினார். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அலுவலர்கள் பல்வேறு வகையான கேள்விகளுக்கு துறை வாரியாக விளக்கமளித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி, தாசில்தார் சண்முகவேல், துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story