முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்
குறைத்தீர் கூட்டம்
முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது . கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு, விவசாயிகள் சங்க தலைவர் அயிலை சிவசூரியன் மற்றும் விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா். விவசாயிகள் அளித்த மனுக்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியா் ராஜன் தெரிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி ஆற்றுடன் அய்யாறு இணைக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் வராததால் சாகுபடி செய்யாமல் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தென்கரை வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடுவது போல் வடகரை வாய்க்காலிலும் தண்ணீா் விட வேண்டும். வடகரை வாய்க்காலுக்கான தலைப்பை மாயனூா் தடுப்பணையிலிருந்து மாற்றி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
35 லட்சம் ஏக்கர் அளவில் தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு லட்சம் ஏக்கர் அளவில் கூட சாகுபடி செய்ய இயலவில்லை.விவசாயிகளை அழிவிலிருந்து மத்திய மாநில அரசுகள் காக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மத்திய அரசை கண்டித்து முசிறியிலும் திருச்சியிலும் பத்தாயிரம் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.