விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
திருப்பூர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்ததில் விவசாயிகள் பலர் பங்கேற்று பேசினார்கள். ஈஸ்வரன்: திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், இனியும் தாமதம் இன்றி அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் கவுசிகா நதிக்கரை பகுதிகளில் மான்களால் விவசாயிகளால் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
புள்ளம்பாளையம் கரித்தொட்டி ஆலைக்கு வட்டாட்சியரே அனுமதி தரவில்லை. அந்த பகுதி பொதுமக்களை அழைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தவில்லை. இன்றைக்கு கரித்தொட்டி ஆலையால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு கால்நடைகளுக்கு கூட நீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு நீர் கெட்டுவிட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் ஒப்புதல் இன்றி எப்படி கரித்தொட்டி ஆலை இயக்க அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. மவுன குருசாமி: தென்னை வேர் வாடல் நோய், கோவை மாவட்டத்தை போன்றே திருப்பூர் மாவட்டத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் கணக்கெடுப்பு பணியை நடத்த வேண்டும். மத்திய,மாநில அரசுகளிடம் இருந்து தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். ஈசன்முருகசாமி: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஏற்கனவே கோவை மாவட்டம் இருகூர் முதல் கரூர் வரை விவசாய விளை நிலங்கள் வழியாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் குழாய் அமைத்துள்ளது. இதனால் எங்கள் நிலத்தில் விவசாயமும் செய்ய முடியாமல், வருவாய் ஈட்ட முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள விவசாய நிலங்கள் கோடிக்கணக்கில் விற்கும்போது பாதிக்கப்பட்ட எங்கள் நிலங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் உள்ளூர் கந்துவட்டிக்கு விடுபவர் வரை யாரும் கடன் கொடுப்பதில்லை.
இந்நிலையில் எங்கள் பகுதியில் மீண்டும் ஒரு எண்ணெய் குழாய் அமைப்பதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனமும் திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது. இந்த திட்டம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூரூ வரை அமைக்கப்பட உள்ளது. முத்தூர்- பெங்களூரூ வரை 270 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை ஓரமாகவே அமைக்கப்பட உள்ளது. ஆனால் முத்தூர் வரை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழாயின் அருகிலேயே மீண்டும் அமைக்கப்பட உள்ளது. இருகூர்- கரூர் வரை அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயை தோண்டி எடுத்து சாலையோரம் அமைக்கவும், புதியதாக திட்டமிட்டுள்ள 2-வது எண்ணெய் குழாயை சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், “அரசின் கொள்கை முடிவுப்படி விளைநிலத்துக்குள் செல்லாமல் சாலையோரம் மட்டும் புதிய திட்டம் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். ஈஸ்வரமூர்த்தி: தற்போதைய மழையால் அமராவதி அணையில் 60 அடி தண்ணீர் உள்ளது. பழைய அமராவதி பாசன வாய்க்கால் அனைத்தும் மண் வாய்க்கால் என்பதால் ஆண்டுதோறும் சீரமைக்க வேண்டி உள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீரமைத்தால் தான் செப். மாதம் வாய்க்காலின் கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.
ஆனால் தற்போது வரை பணிகள் துவங்கப்படவில்லை. பொதுப்பணித்துறை நிதி இல்லை என்பதால், மாவட்ட ஆட்சியர் தனது நிர்வாக நிதியில் ரூ. 30 லட்சம் கொடுத்து, வாய்க்கால்களை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் மட்டும், பழைய வாய்க்கால்களை நம்பி உள்ள விவசாயிகளை காப்பாற்ற முடியும்.
பாலதண்டபாணி: தமிழகத்தில் முதன்முதலில் துவங்கப்பட்ட அமராவதி சர்க்கரை ஆலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஆலை முறையாக இயங்காததால் விவசாயிகள் போதிய அரவைக்கு தரமுடியாமல் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். அரசிடம் கூடுதல் நிதி பெற்று ஆலையை புனரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பொதுத்துறை சர்க்கரை ஆலையை நம்பி பல்லாயிரக்கணக்கிலான கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆண்டுதோறும் பலரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக தனியார் ஆலைக்கு செல்லும்போது, கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவு பெற்றாலும் கூட நில அளவைத்துறையில் இருக்கும், அளவையர்கள் அளந்து தருவதில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.