விவசாய நிலத்தில் பூச்சிகள் அழிப்பு

மழையால் பருத்தி, எள் உள்ளிட்ட பணப்பயிர் விவசாயிகள் வேதனை அடைந்தாலும், நெற்பயிருக்கு தீங்கு செய்யக்கூடிய பூச்சிகள் அழிந்து விட்டதாக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடர் கோடை மழையால் தீமை பூச்சிகள் அழிந்துள்ளன. இதனால் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிக்கான செலவுகள் மிச்சம் ஆகியுள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

மேலும் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆடு, மாடுகளை பொறுத்தவரை தீவனத்துக்கு என்று பெரும்பாலும் செலவுகள் இருக்கும். இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொறுத்தி குறுவை பரப்பு குறைந்து சம்பா, தாளடி பரப்பு அதிகரிக்கும். தற்போது பல்வேறு இடங்களில் கோடை சாகுபடி நடந்து வருகிறது.

மேலும் சிலர் நெல்லை தவிர பருத்தி, எள் உள்ளிட்ட பணப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கும்பகோணத்தில் காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள மக்கள் ஆழ்துளை கிணறுகளின் தண்ணீரை கொண்டு கோடை சாகுபடி செய்துவருகின்றனர். கும்பகோணம் கோட்டத்தில், கோடை நெல் சாகுபடி சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெறும். அதன்படி தற்போது பம்ப்செட் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கும்பகோணத்தை அடுத்த ஏரகரம், திருப்புறம்பியம், உத்திரை, கொரநாட்டுகருப்பூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் நாற்று நடவு செய்து சாகுபடி செய்தனர். சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் தற்போது நாற்றுகள் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் கோடை நெல் நாற்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க விவசாயிகள் உரமிட்டனர்.

நெல்சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் பாசிபடர்ந்து காணப்பட்டது. இதனால் நெல்லுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் அவை பூச்சி தாக்குதலுக்கு உள்ளானது. சில இடங்களில் மஞ்சள் நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் வீணாகியது. அதே போல் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமை, முறையான மின்வினியோகம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நெற்பயிர்கள் வளர்ச்சி பாதித்தது. இதனால் மழை பெய்தால் பயிர்களை காப்பாற்றி விடலாம் என்று விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில் கும்பகோணத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பருத்தி, எள் உள்ளிட்ட பணப்பயிர் விவசாயிகள் வேதனை அடைந்தாலும், நெற்பயிருக்கு தீங்கு செய்யக்கூடிய பூச்சிகள் அழிந்து விட்டதாக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். .

Tags

Next Story