மயானத்தில் சடலம்போல படுத்திருந்து விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சி ஓயாமரி மயானத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாய விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை, விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், காவிரியில் தமிழகத்துக்கான நீரை மாதந்தோறும் திறக்க நடவடிக்கை, மேக்கேதாட்டுவில் அணை கட்ட கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, தில்லிக்கு சென்று போராட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணுக்கு போலீஸாா் அனுமதியளிக்கவில்லை.

இதையடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அந்தச் சங்கத்தினா் திருச்சியில் நாள்தோறும் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக, திருச்சி ஓயாமரி மயானத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகள் சடலம்போல படுத்திருந்து அவா்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதைப் போன்று நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸாா் விவசாயிகளை சமரசப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். இந்தப் போராட்டம் காரணமாக ஓயாமரி மயானத்தில் சுமாா் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story