ராசிபுரத்தில் தனியார் காய்கறி கடையால் உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பு

ராசிபுரத்தில் உழவர்சந்தை அருகே தனியார் காய்கறி கடையால் உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள உழவர் சந்தையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்று வருகின்றனர். உழவர் சந்தை நடைபெறும் இடத்திற்கு, 300 மீட்டருக்குள் எந்த தனியார் காய்கறி கடைகளும் அமைக்க கூடாது என அரசாணை உள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகம், உழவர் சந்தையின் வெளியே தனியார் காய்கறி கடைகளை அமைக்க அனுமதி வழங்கி, அதற்கான சுங்க கட்டணத்தையும் வசூலித்து வருகிறது. இதுகுறித்து, தங்களது வியாபாரம் பாதிப்பதாக உழவா்சந்தை விவசாயிகள் பலமுறை நகராட்சிக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி உழவர் சந்தையை பூட்டி உள்ளேயே விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உழவர் சந்தைக்கு அருகே வியாபாரிகள் கடையை அனுமதிக்க கூடாது. மேலும், உழவர்சந்தை முடிந்த பிறகே வார சந்தை வியாபாரிகள் கடை அமைக்க வேண்டும் என்றனர். இந்நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உழவர் சந்தைக்கு முன்பு கடை போட்டு வியாபாரம் செய்தனர். இதனால், உழவர் சந்தை வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உழவர்சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். ராசிபுரம் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் சுமார் 20-க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story