பயிர் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டாத விவசாயிகள்

குறைந்த அளவே இழப்பீடு வழங்குவதால், சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்ய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்ய இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனம், பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற் றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் விவசாயிகளிடமிருந்து பிரீமியமாக ஏக்கருக்கு ரூ.542 வசூலித்து வருகின்றன. இந்தத் தொகையை இ-சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் செலுத்தி வருகின்றனர்.

நிகழாண்டு சம்பா பருவத்தில் இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், இதுவரை 14,616 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தியுள்ளனர். இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மீதமுள்ள விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்ய முன்வருவார்களா என்பது சந்தேகமாக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2021- 2022-ம் ஆண்டு சம்பா பருவத்தில் கடுமையாக மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கைகொடுக்கும் என விவசாயிகள் நம்பியிருந்தனர்.

ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 கிராமங்களுக்கு ரூ.36 லட்சத்தை மட்டுமே காப்பீடு நிறுவனங்கள் வழங்கின. அதேபோல, கடந்த 2022-2023 சம்பா பருவத்தில் ரூ.16 கோடியை விவசாயிகள் பிரீமியமாக செலுத்தி யிருந்தனர். அப்போது பருவம் தவறி பெய்த மழையால் மாவட் டத்தில் பெருமளவு மகசூல் பாதிக்கப்பட்டது.

ஆனால் காப்பீடு நிறுவனங்களோ வெறும் 7 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.1.13 கோடி மட்டும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கின. கடந்த 2 ஆண்டுகளில் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டும் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்ய ஆர்வம் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பயிர் காப்பீட்டை அரசை ஏற்று செயல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story