பிரதமரின் கிசான் சம்மன் நிதி வழங்கக்கோரி விவசாயிகள் மனு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் தாண்டவராயன், பொருளாளர் சிவராமன் ஆகியோர் தலைமையில் வீரசோழபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்த தகுதிகளின் அடிப்படையில் இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில், கண்டாச்சிபுரம் தாலுகா வீரசோழபுரம் கிராமத்தில் தகுதியான விவசாயிகளுக்கு இன்னமும் பிரதமரின் கிசான் சம்மன் நிதி உதவி கிடைக்காமல் இருந்து வருகிறது. எனவே மாவட்ட வேளாண்துறை, இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி தகுதியான விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கும், கூட்டுப்பட்டா வைத்துள்ள விவசாயிகளுக்கும் உடனடியாக பிரதமரின் கிசான் சம்மன் நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற வேளாண் இணை இயக்குனர் கணேசன், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Next Story