காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டலத்தில் 2வது சுற்றி பாயக்கூடிய பிஏபி வாய்க்காலில் பாசன தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் கடைமடைக்கு தற்போது வரை தண்ணீர் வந்து சேரவில்லை. திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 126 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம் சென்னிமலை சாலையில் 6.09 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கடைமடைக்கு உரிய தண்ணீர் வரவில்லை. எனவே இரண்டாவது சுற்றில் பாயக்கூடிய முதல் 4 ஆயிரம் பரப்பளவு ஏக்கர் பாசன விவசாய பூமி தற்போது வறட்சியை கண்டுள்ளது. எனவே விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மேற்பார்வையிட்ட அதிகாரிகள் முறையான பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தற்போது பிஏபி விவசாயிகள் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: முதல் மண்டலம் இரண்டாம் சுற்றில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் வசதி பெற வேண்டும் ஆனால் கடைமடையான சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை சென்று அடையவில்லை. இதற்கான முறையான பதிலும் அதிகாரிகள் அளிக்கவில்லை. எனவே நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். மேலும் உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் காங்கேயம் காவல் நிலையம் சென்று இந்த அபரிமிதமான தண்ணீர் திருட்டை தடுக்கவும், இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிஏபி விவசாயிகள் சார்பில் புகார் அளிக்க உள்ளோம். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்ளிருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர். மேலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை கேட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.