நெய் தீபம் ஏற்றி கரும்பை தீயிட்டு கொளுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில். நெய் தீபம் ஏற்றி கரும்பு கட்டுகளை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தி விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலசப்பாக்கம் வட்டம் காந்தப்பாளையம் ஊராட்சி சீனந்தல் பகுதியில் விவசாயி முனியப்பன் தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டு அதனை வெட்டி சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல முயன்ற போது அதே பகுதியை சேர்ந்த சில நபர்கள் பாதையைமறித்து கரும்பு கட்டுகளை எடுத்து செல்ல முடியாமல் தடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கரும்பு கட்டுகளை தலையில் சுமந்து வந்து கோட்டாட்சியர் தனலட்சுமியிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். பின்னர் இருதரப்பையும் அழைத்து பேசி கலசப்பாக்கம் தாசில்தார் முன்னிலையில் கரும்பு கட்டுகளை எடுத்து செல்ல சுமுக முடிவு எட்டப்பட்டது.
ஆனால் எதிர் தரப்பினர் மீண்டும் வழி விடாமல் போக்கு காட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் அகல் விளக்கு நெய் தீபம் ஏற்றி கரும்பு கட்டுகளை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தி அரோகரா அரோகரா என்று கோஷமிட்டனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மஞ்சுளாவிடம் புகார் அளித்து சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இதில் பொதுச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் சதுப்பேரி மூர்த்தி மற்றும் விவசாய சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் விவசாயிகள் கரும்பை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.