பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !
ஆர்ப்பாட்டம்
திருப்புவனத்தில் பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயத்தை அழிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகையாற்றை ஒட்டியுள்ள திருப்புவனம் பகுதியில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவைகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. திருப்புவனம் பகுதி வாழை இலைகள், தேங்காய்கள் உள்ளிட்டவற்றிற்கு மதுரை மார்கெட்டில் தனி மவுசு உண்டு, வியாபாரிகள் திருப்புவனம் பகுதி வாழை இலைகளை விரும்பி வாங்குவார்கள், மற்ற பகுதி வாழை இலைகள் மூன்று நாட்களில் வாடி பயன்படுத்த முடியாத அளவிற்கு காய்ந்து போய்விடும், திருப்புவனம் பகுதி வாழை இலைகள் பத்து நாட்கள் வரை வாடாது என்பதால் வியாபாரிகள் விரும்பி வாங்குவார்கள், அதுபோல தேங்காய், வெற்றிலைக்கும் தனி மவுசு உண்டு, கடந்த ஐந்து வருடங்களாக திருப்புவனம் பகுதியியில் ஒவ்வொரு கிராம கண்மாய்களிலும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக குடியேறி விவசாயத்தை அழித்து வருகின்றன. திருப்புவனம் பகுதியில் நாற்றங்கால் அமைத்துதான் நெல் பயிரிடுவது வழக்கம், இரவு நேரத்தில் வளர்ந்த நாற்றுகளை வேருடன் பிடுங்கி போடுவது, நெல் தூவிய நாற்றங்காலை சேதப்படுத்துவது, வாழை கன்று, தென்னங்கன்றுகளை சேதப்படுத்துவது என பன்றிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் 4 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிட்டு வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 500 ஹெக்டேரில் மட்டுமே அதிலும் நெல் விளைச்சலுக்கு வரும் வரை 24 மணி நேரமும் காவலுக்கு கூலி ஆட்களை நியமித்து விவசாயம் செய்து வருகின்றனர். புதிதாக தென்னை மரங்களை நடவு செய்யவே முடியவில்லை. வாழை விவசாயமும் பெருமளவு குறைந்து விட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் விவசாயிகள் திருப்புவனம் தாலுகா அலுவலக வாசலில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் தாலுகாவில்தான் அதிகளவு பன்றிகள் உள்ளன. இவற்றால் விவசாயமும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும், நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story