தென்னையை தோட்டக்கலைத்துறைக்கு மாற்ற விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தென்னை சாகுபடியை வேளாண்மைத்துறையில் இருந்து தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம் செய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை காலை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: காவிரியில் உரிய தண்ணீர் வராத காரணத்தால், டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இல்லாமல், குறுவை சாகுபடியும், சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய நவ.15 ஆம் தேதி என கூறப்பட்டுள்ளது. தற்போது போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், சில இடங்களில் மழையை எதிர்பார்த்து காலதாமதமாக சம்பா நடவு தொடங்க உள்ளதால், பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை டிச.15 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கோழிப்பண்ணை தொடங்க, கடந்த இரு ஆண்டுகளாக அதற்கான மானியம் இல்லாமல், இந்த திட்டத்தை விவசாயிகள் செயல்படுத்தாமல் உள்ளனர். எனவே விவசாயம் சார்ந்துள்ள கோழிப்பண்ணை தொடங்கி விவசாயிகளுக்கு உரிய மானியத்தை வழங்க வேண்டும். வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டு வந்த தென்னை சாகுபடியை, தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தென்னை விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியாமல் வெளியிடப்பட்ட இந்த அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற்று, பழைய படி வேளாண்மைத்துறையின் கீழே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் அதிகளவு ஏரி, குளங்கள் உள்ளது. ஆனால் தற்போது எங்கும் தண்ணீர் தேக்க முடியாத நிலையில் உள்ளதால், உடனடியாக ஏரி, குளங்களை தூர்வாரி, மழை பெய்யும் போது தண்ணீரை தேக்கி, எதிர்கால நிலத்தடி நீர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தற்போது பல இடங்களில் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். எனவே 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அரசு முன் வரவேண்டும். மழைக்காலமாக இருப்பதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 நாள் பணியாளர்களை கொண்டு ஆங்காங்கே பனை விதைகளை விதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர். முன்னதாக, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை, விவசாயிகள் முன்னிலையில், ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags

Next Story