100 நாள் வேலையை முழுமையாக வழங்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், நாமக்கல் மாவட்ட தலைவர் சி.துரைசாமி தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி, 15 ஊராட்சி ஒன்றியங்கள், 324 ஊராட்சிகள் ,19 பேரூராட்சிகள் என 17 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில், பிரதானமாக விவசாயத் தொழில் உள்ளது .
பருவமழை சரியாக பெய்யாததால் வேளாண் தொழிலை நம்பி வாழ்ந்து வந்த ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட சிறு குறு ஏழை விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு முழுமையான வேலைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே குடும்ப வாழ்வாதாரத்துக்காக சிரமப்பட்டு வரக்கூடிய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், மாவட்டம் முழுவதும் அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்கிட வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகள் பெற்றுள்ள பள்ளிபாளையம் ஒன்றியம் மாம்பாளையத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய உதவி தலைவர் நடேசன், மாவட்ட தலைவர் சி.துரைசாமி ஆகியோரிடம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியதற்கான மூன்று மாத சம்பளம் நிலுவையில் உள்ளது . அதனை பெற்றுத் தருவதற்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடிவரும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்திற்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர். ..