தரமான விதைகடலை வழங்க, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தரமான விதைகடலை வழங்க, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தரமான விதை கடலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்: தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கரும்பை பொருத்தவரை உடனடியாக அரைவை செய்யாவிட்டால் பிழிதிறன் குறைந்துவிடும். எனவே, குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரைவைப் பருவத்தை டிசம்பர் 4 ஆம் தேதியே தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு ஆலையில் அரைவை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர்: மேட்டூர் அணை மூட்டப்பட்ட நிலையில், பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே சம்பா, தாளடி பருவத்தில் நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் இலவசமாக உழவு செய்து தர வேண்டும். மேலும், வேளாண் துறை மூலம் மானிய விலையில் அல்லது விலையில்லாமல் ஜிங்க் சல்பேட் வழங்க வேண்டும்.

ராயமுண்டான்பட்டி வெ.ஜீவகுமார்: பூதலூர் வட்டத்தில் ஏரிகளில் தண்ணீர் இல்லாததால், அதைச் சார்ந்த பகுதிகளில் ஆழ்குழாய் மோட்டார் பம்ப்செட் மூலம்தான், சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டால்தான் பயிர்களைக் காப்பாற்ற முடியும்.

பாச்சூர் புண்ணியமூர்த்தி: நடமாடும் மண் பரிசோதனை வாகனம் இல்லாததால், மண் பரிசோதனை செய்வதில் சிரமம் நிலவுகிறது. எனவே, நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். ஆம்பலாப்பட்டு அ.தங்கவேல்: ஒரத்தநாடு வட்டத் தலைமை அளவர், தொண்டராம்பட்டு சரக அளவர் பணியிடங்கள் காலியாகவுள்ளதால், பொதுமக்கள் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே, இந்த இரு பணியிடங்களையும் விரைவாக நிரப்ப வேண்டும்.

சிவவிடுதி கே.ஆர்.ராமசாமி: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்து, நிலக்கடலை சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. ஆனால், தரமான நிலக்கடலை விதை கிடைப்பதில்லை. தனியாரிடம் 37 கிலோ மூட்டை கொண்ட நிலக்கடலை விதை ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ. 5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. எனவே, அரசு தரமான விதைக்கடலையை வழங்க வேண்டும்.

பாச்சூர் எல்.பழனியப்பன்: மாவட்ட ஆட்சியரகத்தில் வங்கிகளில் பயிர்க்கடன் அளவு நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆனால், 7 விவசாயிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு, மற்ற விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளைக் கைவிட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் கோரிக்கைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா பதில் அளித்துப் பேசினார்.

Tags

Next Story