கலெக்டரிடம் முறையிட காய்ந்த சம்பா பயிர்களுடன் வந்த விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு காய்ந்த சம்பா, தாளடி பயிர்களுடன் விவசாயிகள் திங்கள்கிழமை வந்து ஆட்சியரிடம் முறையிட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு மாவட்டத் தலைவர் ஆர். செந்தில்குமார் தலைமையில் காய்ந்த சம்பா, தாளடி பயிர்களுடன் திங்கள்கிழமை வந்தனர். இது குறித்து செந்தில்குமார் கூறுகையில், காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் புத்தூர் கிராமத்தில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று மற்ற பகுதிகளிலும் நிலவுகிறது. தண்ணீர் இல்லாததால் பயிர்களில் கதிர்கள் பதராகிவிட்டதால், அறுவடைக்கு கூட கூலி வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால், வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வருவாய்த் துறையினரும், வேளாண் துறையினரும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகசூல் குறைவாக உள்ளதால் பயிர் காப்பீடு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.