வட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்த விவசாயிகள்
வாக்களர் அடையாள அட்டையை ஒப்படைத்த விவசாயிகள்
திருமூர்த்தி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பல்லடம், பொங்கலூர் வழியாக சுமார் 126 கிலோ மீட்டர் பயணித்து காங்கேயம் வழியாக கடைமடை பகுதி வெள்ளகோவில் வரை பாய்கிறது இந்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கால்வாய் திட்டம் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் வசதி பெரும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக நடைபெறும் பிஏபி கால்வாய் தண்ணீர் திருட்டு மற்றும் உரிய நீர் திறக்கப்படாதது போன்ற காரணங்களால் கடைமடை பகுதியான காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் அதிகப்படியான வறட்சி நிலவுவதாக பாசன சங்க விவசாயிகள் தொடர்ந்து பலவித போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வருடம் சுமார் 7 நாட்கள் நடத்திய தொடர் பட்டினி போராட்டம் காங்கேயம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதன் தொடர்ச்சியாக பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க விவசாயிகள் தண்ணீர் திருட்டை தடுக்கவும், சமச்சீர் பாசன கொள்கையை முன்வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை வழியுறுத்தி தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர்.
விவசாயிகள் தெரிவித்ததாவது, மக்கள் அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தியாகும் இது போன்ற விவசாய நிலங்கள் தற்போது தண்ணீர் இன்றி வறட்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரு சிலரின் சமூக விரோத செயல்களினால் விவசாய நிலங்களுக்கு பாய வேண்டிய தண்ணீர் திருடப்படுவதனால் மட்டுமே. மேலும் விவசாய நிலங்களுக்கும், கால்நடைகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கும் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே விவசாயம் மற்றும் அதனை சார்ந்த உணவு பொருட்கள் உற்பத்தி பாதிப்படைகிறது.
மேலும் இந்த தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த தண்ணீர் திருட்டுக்கு அதிகாரிகளும்உறுதுணையாக செயல்படுகின்றனர். எனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவாத அரசிடம் எங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை நாங்கள் ஒப்படைக்க வந்துள்ளோம். அரசு எங்களுக்கு உதவாத போது வாக்காளர் அட்டை மட்டும் எங்களுக்கு எந்தவிதத்தில் பயனளிக்கும். எனவே இந்த தண்ணீர் திருட்டை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வாக்களிக்க போவதில்லை. இவ்வாறு கூறினர்.
இதனை அடுத்து உடன்படிக்கைக்கு வராத தாசில்தார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டையை வாக்க மறுத்ததால் சுமார் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை தாசில்தாரின் மேசையின் மீது வைத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.