மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மேட்டூர் கிழக்கரை வாய்க்காலில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அரசிராமணி, கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, காவேரிப்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் சாா்பில் மேட்டூா் கிழக்குக் கரை வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில் சி.நவநீதகண்ணன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, மேட்டூா் கிழக்குக் கரை வாய்க்கால் பாசனத்தை நம்பி சுமாா் 45,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றது. தற்போது வறட்சியான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து விவசாயிகளும், பொதுமக்களும், கால்நடைகளும் குடிநீா் பற்றக்குறையால் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே 15 நாள்களுக்கு குடிநீா் தேவைக்காக கிழக்குக் கரை கால்வாயில் தண்ணீா் திறந்து விட வேண்டுமென வலியுறுத்தி அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசிராமணி, குள்ளம்பட்டி பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் எந்த பயனும் ஏற்படாததால் வருகின்ற மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே போா்க்கால அடிப்படையில் கிழக்குக் கரை வாய்க்காலில் 15 நாள்களுக்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story