திருவையாறு பகுதியில் வாழைத்தார் விலை கடும் சரிவு - விவசாயிகள் வேதனை

திருவையாறு பகுதியில்  வாழைத்தார் விலை கடும் சரிவு -   விவசாயிகள் வேதனை
வாழைத் தார்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் வாழைத்தார் விலை வெகுவாக சரிந்து விட்டதால் விவசாயிகளிடம் இருந்து அதனை வாங்க கமிஷன் மண்டியில் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, தோகூர், திருவையாறு, நடுக்காவேரி, மேலத்திருப்பூந்துருத்தி, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.

கடந்த பொங்கல் பண்டிகையின் போது வாழைத்தார் விலையில் சரிவு ஏற்பட்டது. தற்போதும் அதே நிலை தொடர்வதால் வாழை விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். வாழைத்தார் சாகுபடிக்கு அதிக செலவுகள் பிடிக்கிறது. வாழைத்தாருக்கு முட்டு கொடுக்கும் முட்டுக்கழியின் விலையும் உயர்ந்துள்ளது. ஆனால் இவ்வளவு செலவு செய்தும் வாழைத்தார் விலை உயரவில்லை.

இது வேதனையை அளிக்கிறது என்று வாழை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வடுகக்குடி உட்பட சுற்றுப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வாழைத்தார்களை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கமிஷன் மண்டியில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு சென்ற போது அதனை வாங்க மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதனால் வாழை விவசாயிகளுக்கும், கமிஷன் மண்டியில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது கமிஷன் வண்டியில் வாழைத்தார்கள் 50 ரூபாய்க்கு கேட்கின்றனர். விலை குறைத்து கேட்பதால் விவசாயிகள் பெறும் நட்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது என்கின்றனர்.

Tags

Next Story