மோட்டார் பைக்கில் வைத்திருந்த பணத்தை திருடிய தந்தை, மகன் கைது

மோட்டார் பைக்கில் வைத்திருந்த பணத்தை திருடிய தந்தை, மகன் கைது

பைல் படம் 

லால்குடி அருகே புள்ளம்பாடியில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கில் ரூ.1.30 லட்சம் பணத்தை திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் வெங்கடாசலபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் 46 வயதான சோலைராஜன்.இவர் புள்ளம்பாடியில் உள்ள ஒரு வங்கியில் தனது நகையை அடமானம் வைத்து ரூ .ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை தனது ஸ்கூட்டி பெப் மோட்டார் பைக்கில் வைத்துவிட்டு எதிரே உள்ள இ.சேவை மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கில் இருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சோலை ராஜன் கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் கல்லக்குடி மால்வாய் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது திருச்சி திருவெரும்பூர் வாஷிங்டன் நகர் பகுதியில் வசித்து வந்த 62 வயதான கணேசன் அவரது மகன் 26 வயதான ராமு என தெரியவந்தது.

மேலும் சோலை ராஜன் மோட்டார் பைக்கில் வைத்திருந்த பணத்தை திருடியதும் தெரியவந்தது. இவர்கள் மீது கோயம்புத்தூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தந்தை மகன் இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story