வரப்பு தகராறில் விவசாயி கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

வரப்பு தகராறில் விவசாயி கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

வரப்பு தகராறில் விவசாயி கொலை செய்த தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை

சேலம் மாவட்டம், காஞ்சேரி பகுதியில் வரப்பு தகராற்றில் விவசாயியை கொலை செய்த தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்தது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை, காஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (40). இவர்களுக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (62). இவருடைய மகன் ஜோதிவேல் (33). 2 பேரும் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி பழனிசாமி, அவருடைய மகன் ஜோதிவேல் ஆகியோர் விவசாய நிலத்தில் உழவு பணி செய்து கொண்டிருந்தனர். விவசாய நிலத்துக்கான பொது வாய்க்கால் வரப்பை, இருவரும் டிராக்டர் மூலம் உடைத்தனர்.

அங்கு வந்த பாலு, லட்சுமி ஆகிய 2 பேரும் ‘ஏன், பொது வாய்க்கால் வரப்பை உடைக்கிறீர்கள்?’ என்று கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பழனிசாமி, ஜோதிவேல் ஆகியோர் பாலுவை தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக லட்சுமி, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பழனிசாமி, அவருடைய மகன் ஜோதிவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் விவசாயி பாலு கொலை வழக்கில், பழனிசாமி, அவருடைய மகன் ஜோதிவேல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், 2 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி ரவி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.

Tags

Next Story