மகளை காணவில்லை என தந்தை புகார்
புகார் அளிக்க வந்தவர்கள்
திருப்பூர் மாவட்டம் வே.கள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலித்தொழிலாளி. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த இரண்டு பெண்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வேலுச்சாமி தனது மகன் குடும்பத்தினர் மற்றும் திருமணமாகாத சற்று மனநிலை பாதிக்கப்பட்ட கடைசி பெண் தங்கமணி (30) உடன் வசித்து வருகிறார்
. வேலுச்சாமி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது , கடந்த 6ஆம் தேதி சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தபோது கடைசி மகள் தங்கமணி வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். மீண்டும் பணிக்குச் சென்றபோது தங்கமணியை காணவில்லை. உடனடியாக தனது மனைவி மற்றும் மகனுடன் கிராமம் முழுவதும் தேடி பார்த்தேன். இரவு வரை மகள் கிடைக்காததால் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 8ஆம் தேதி மாலை எனது மகன் செல்போன் வாட்சப் குழுவில் தனது மகளை காவல்துறையினர் விசாரிப்பது போல வீடியோ வந்துள்ளது . இது குறித்து காவல்துறையிடம் தெரிவித்து விசாரணை மேற்கொண்ட போது கொடுவாய் அருகே உள்ள நிழலிகவுண்டம்பாளையத்தில் பொதுமக்கள் சுற்றித்திரிந்த தங்கமணியை சந்தேகத்திற்கு இடமாக பிடித்து காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காங்கேயம் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது திருப்பூர் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து திருப்பூரில் உள்ள பல்வேறு காப்பகங்களில் விசாரித்த போது அவ்வாறு யாரும் வரவில்லை என தெரிவித்துள்ளனர். காப்பகத்திற்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்த காவல்துறையினர் தற்போது தங்கள் மகளை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.
எனவே உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். காணாமல் போன தங்கள் மகளை உடனடியாக கண்டுபிடித்த தரவேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பெற்றோரிடம் தெரிவிக்கும்போது , பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகளில் தங்கமணி செல்வது பதிவாகியுள்ளது.
விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல்துறையினர் மீது கூறிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.